யாருக்காக இது யாருக்காக

 அன்றாட வாழ்வில் நடித்து பழகிவிட்ட நமக்கு உண்மையில் நாம் யார் என்பதை மறந்தே விட்டோம்.

 நிமிடத்திற்கு ஒரு முகமூடியை அணிந்து உண்மையில் நம் முகம் என்ன என்பதை தொலைத்து விட்டோம். யாருக்காக இதெல்லாம் யாருக்காக செய்கிறோம்? தெரியவில்லை.

காலையில் எழுந்ததும் அந்த நாள் பிடித்திருக்கிறதோ இல்லையோ சிரித்துக் கொண்டே எழுகிறோம்.  வேலைக்கு செல்ல விருப்பம் இருக்கிறதோ இல்லையோ சிரித்துக் கொண்டே செல்கிறோம். யாரிடமும் பேச பிடிக்காமல் இருந்தாலும் சிரித்தே பேசுகின்றோம். கோவம் வந்தாலும்  புன்னகை செய்தே கடக்கின்றோம். ஆயிரம் குழப்பங்கள் மனதில் இருந்தாலும் வெளியில் அமைதி பூங்காவாக சிரித்து மகிழ்கின்றோம்.  சிறு சிறு விஷயங்களுக்கு எல்லாம் சிரிக்கின்றோம் மனதில் பெரும் புயல்களை கூட மறைக்கின்றோம்.

                   Pc: Jacqueline Langridge

 அவருக்கு அது பிடிக்காது இவளுக்கு இது பிடிக்காது என்று யோசித்து யோசித்து உண்மையில் நமக்கு என்ன பிடிக்கிறது என்பதை மறந்தே விட்டோமோ?  இப்படி வாழ்வதில் நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா இல்லையா? அல்லது யாருக்காக உங்களை மாற்றிக் கொண்டீர்களோ அவர்களாக சந்தோஷமாக இருக்கிறார்களா இல்லையா?  உங்களுக்கு பிடித்த மாதிரி வாழவும் முடியாமல் அடுத்தவருக்கு பிடித்த மாதிரி இருக்கவும் முடியாமல் யாருக்காக? இது எல்லாம் யாருக்காக? 

மனதில் எழுகின்ற இன்னல்களை எல்லாம் கொட்டி தீர்த்து ஆறுதலாக இரு வார்த்தைகள் சொல்லி நம்மோடு பயணிக்கின்ற ஒரு ஜீவன் ஆவது வாழ்வில் சம்பாதிக்க வேண்டும் என்ற ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றோம். சம்பாதிக்க முடிந்ததா? இல்லையே நாளுக்கு ஒரு முகமூடி, ஆளுக்கு ஒரு பேச்சு, நிமிடத்திற்கு ஒரு பாவனை என பிறரை மட்டுமல்ல தங்களையும் தாங்களே ஏமாற்றிக்கொண்டு ஒரு வேடிக்கையான வாழ்க்கையை  வாழ்கிறோம் இல்லையா?

வாழவும் முடியாமல் சாகவும் விருப்பம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் பல பேரில் நீங்களும் ஒருவரா?  யாருக்காக இதெல்லாம் யாருக்காக ? 

ஆறுதலாக பேச ஒரு தோளும்...  நான் இருக்கிறேன் என்று கூற ஒரு கரங்களும் இருந்தால் வாழ்க்கையே வென்று விடலாம் என்று உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஒரு முட்டாளா நீங்கள் ?

உங்களை நீங்களே நம்பாத போது...  உங்களை நீங்களே வெறுக்கின்ற போது... நீங்கள் உண்மையில் யார் என்று உங்களுக்கே தெரியாத போது... இன்னொருவர் வந்து உங்களை புரிந்து கொள்ள முடியுமா?? நேசிக்க முடியுமா?? அப்படி நேசித்தால் அந்த நேசம் உண்மையாகுமா??  யோசியுங்கள்.

 யாருக்காக இதையெல்லாம் செய்கிறோம்?? யாருக்காக?? இது யாருக்காக?? 


Comments

Post a Comment

Popular posts from this blog

ஆடி ஒன்னு அப்படின்னா???

ஊடலில் காதல்

சில நேரங்களில்... சில மனிதர்கள்...