இதுதான் வேண்டுமா

 உண்மையில் இதுதான் வேண்டுமா??  பெண்ணென்றால் ... பொறுமை, அன்பு, நிதானம், விட்டுக் கொடுத்து போதல், தன்னையே தியாகம் செய்து பிறருக்காக வாழ்வது என்று பல  கற்பனை உருவங்களை... விருப்பம் இருக்கிறதோ இல்லையோ அவளுக்கு திணித்துக் கொண்டிருக்கும் சமுதாயத்தில் பிறந்து இருக்கிறோம்.

உண்மையில் ஒரு பெண் இதைத்தான் வேண்டும் என்கின்றாளா?? தன்னையே தியாகம் செய்து வாழ்கின்ற ஒவ்வொரு பெண்ணும் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்களா??  அவள் தனக்கென ஒரு நாள் கூட வாழ்ந்ததில்லை என்று அவள் இறந்த பின்பு சொல்லும் ஒவ்வொரு வயதான கணவரும் அதைக் கேட்க அவள் இல்லையே..  அவள் இருக்கும் போதே சொல்லிவிடலாம் என்று ஏன் சொல்லத் தோன்றவில்லை??

                              Pc: Herstory
 

இருக்கும் வரை மதிப்பதே இல்லை.  இதைத்தான் ஒரு பெண் வேண்டும் என்கின்றாளா?  தன் சுயமரியாதையை விட்டுவிட்டு, சுக துக்கங்களை விட்டுவிட்டு, பிறருக்காக வாழ நினைக்கும் ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் எத்தனையோ சொல்ல முடியாத சோகங்கள் இருக்கின்றன.  ஆனால் வெளியில் காகிதப் பூக்களைப் போல என்றும் சிரித்துக் கொண்டிருக்கிறாள். இதைத்தான் இந்த சமூகம் எதிர்பார்க்கிறதா?  ஒரு மனிதன் தன் வாழ்வில் காதல் இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம். ஆனால் சுயமரியாதை இல்லாமல் வாழ்வது எவ்வளவு கொடுமை தெரியுமா ??

சமூகமே பெண்களை ஜனத்தொகைகள் உற்பத்தி செய்யும் இயந்திரமாக மட்டுமே பார்க்கிறீர்களே...  அவளும் சதையும் ரத்தமாக பிறந்த ஒரு உயிரினம் என எப்போது உணரப்போகிறீர்கள்? 

 ஒவ்வொரு பெண்ணையும் வற்புறுத்தி  உட்கார வைத்து பார்த்து ஓரிரு ஆறுதல் வார்த்தைகள் சொல்லிப் பாருங்களேன்...  ஓராயிரம் ரத்தக்கண்ணீர் கதைகளை நீங்கள் கேட்க நேரிடும்.  இத்தனைக்கும் காரணம் ஒரு ஆண் சமூகம் மட்டுமே என்று சொல்லிவிட முடியாது.  ஒரு பெண்ணுக்கு பெண் எதிரி என்பது போல ஒரு பெண்ணிற்கு அனைவருமே எதிரியாக தான் இருக்கின்றனர். 

 நாங்கள் பொறுமையாக இருக்க விரும்பவில்லை... நாங்கள் விட்டுக் கொடுத்துப் போக விரும்பவில்லை...  நாங்கள் அனுசரித்துப் போக விரும்பவில்லை...   எனக்காக ஒரு வாழ்க்கை வாழ வேண்டும்.... விருப்பப்படி நான் இருக்க வேண்டும்....  கண்ணகியாகவோ சீதையாகவோ திரௌபதியாகவோ காலம் காலமாக சொல்லி வரும் கற்பனை காவியங்களாக நான் இருக்க விரும்பவில்லை....  நான் நானாக இருக்க விரும்புகிறேன்....  இருப்பது ஒரு வாழ்க்கை அது எனக்காக வாழ்கிறேன்..... காலம் முழுவதும் கண்ணீர் விட்டு கஷ்டப்பட்டு...  அடி மிதி  வாங்கி... நான் இறந்த பிறகு நீ நல்லவள் தான் தியாகி தான் என்று பிச்சையாக தூக்கிப் போடும் அந்த இச்சை வார்த்தைகளை கேட்க விரும்பாத ஒரு பெண்ணை இந்த சமூகம் என்ன சொல்கிறது??  பெண்ணியவாதி....

 ஆம்.  நாம் அவர்களுக்கு இட்ட பெயர் பெண்ணியவாதி... அடங்காப்பிடாரி... வாயாடி...  இப்படி ஒவ்வொரு பச்சையை குத்தி அவர்களை ஓரம் வைத்து விடுகிறோம் . எத்தனை படங்கள் வந்தால் என்ன? எத்தனை புத்தகங்கள் வந்தால் என்ன ? இத்தனை புரட்சி செய்தால் என்ன?  இது திருத்த இயலுமா? மாடனிசம் என்று எவ்வளவோ தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதே நிலைமையில் பெண்கள் இன்னுமும் சற்று பின்தள்ளி தான் இருக்கின்றனர். அவர்கள் விருப்பப்பட்டோ திணிக்கப்பட்டோ சில நேரங்களில் விருப்பம் இல்லாமலோ தனித்து விடப்பட்டோ இருக்கின்றனர்.

இங்கே பெண்கள் முன்னேறிக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் மனதளவில் பின்தங்கியே இருக்கின்ற சமுதாயத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.  சட்டங்கள் எல்லாம் பெண்களை பாதுகாக்க தான். ஆனால் பெண்களுக்காக என்று சொல்லிவிட முடியுமா? பெண்களைப் போற்றும் இந்த புண்ணிய உலகத்தில் தான் நாம் பெண்களை அடித்தும் துன்புறுத்தியும் கொண்டிருக்கின்றோம்.  உடம்பளவில் மட்டுமே இறந்தால்தான் சாவா?  மனதளவில் என்றோ இறந்து கிடக்கின்ற பல பெண்களை நான் சந்தித்து இருக்கிறேன்.  சட்டங்கள் எல்லாம் பெண்களுக்கு சாதகமானது தான். உலகமே பெண்களைப் போற்றுகின்றது தான். பெண்களுக்கே எல்லா  முன்னுரிமையும் வழங்கப்படுகிறது தான்.  ஆனால் ஏதோ ஒன்று....  மனதளவில் அவள் பின்தங்கிய தான் இருக்கின்றாள்.  இன்னும் குமரிக் கொண்டுதான் இருக்கின்றான்

ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு நாளைக்கு பத்து அழுகுரல் ஆவது அவள் மனதுக்குள் சத்தமாக ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது.

பெண்களை பெண்களாகவே இருக்க விடுங்களேன். இப்படி நடக்க வேண்டும் இப்படி பேச வேண்டும் இப்படி உடை உடுத்த வேண்டும் சிரிக்க வேண்டும் இப்படி உட்கார வேண்டும் இப்படி வாழ வேண்டும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கடிவாளம் கட்டி எத்தனை முறை எத்தனை பேர் தான் அவளை இழுத்து கட்டிப் போடுவது?? 

அவளுக்கும் பண்புகள் தெரியும் இதை புரிந்து கொண்டு அவள் மனதளவில் என்று முன்னேறுகிறாளோ அன்றுதான் பெண்களின் உண்மையான முன்னேற்றம். உண்மையா??  இல்லையா???

வாசிப்போம் சுவாசம் உள்ளவரை.

 நன்றி

Comments

Popular posts from this blog

ஆடி ஒன்னு அப்படின்னா???

ஊடலில் காதல்

சில நேரங்களில்... சில மனிதர்கள்...